தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடிய மக்கள் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
திருச்சி
அமாவாசை தினத்தில் நீர்நிலைகளில் புனித நீராடி, மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்களது ஆத்மா சாந்தி அடைந்து குடும்பம் சுபிட்சம் அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக தை அமாவாசை சூரியனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் சூரியனும், சந்திரனும், சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுவதால் இன்று அதிகாலையிலேயே ஏராளமானோர் திரண்டு வழிபாடு நடத்தினர்.
தை அமாவாசையை முன்னிட்டு திருச்சி உறையூரில் உள்ள பழமைவாய்ந்த குங்குமவல்லி தாயார் ஆலயத்தில் தில்லை காளிக்கு வர மிளகாய் தீப வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படுகையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் அங்குள்ள படித்துரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ராமேஸ்வரம்
பிரசித்திபெற்ற புனித தலமான ராமேஸ்வரத்தில், தை அமாவாசையொட்டி பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள் அதிகாலையில் அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடினார்கள். பின்னர் கடற்கரையில் பித்துருக்களுக்கு பிண்டம், எல்லு வைத்து தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் யாத்ரீகர்கள் நேற்று இரவு முதலே வந்து குவிந்திருந்தனர்.
கடலூர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நூற்றாண்டு பழமையான கொளஞ்சியப்பர் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு முருகப்பெருமான், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.
இங்கு கொளஞ்சி செடியின் நடுவே உள்ள பலிபீடத்தில் பசுமாடு ஒன்று தானாக பால் சுரந்ததாக கூறப்படுகிறது. அங்கு அமைந்துள்ள கொளஞ்சியப்பர் கோவிலில் அமாவாசை தினத்தில், பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை செல்ல மாலை அணிந்தனர்.
சென்னை
சென்னை மைலாப்பூர் கபலீசுவரர் ஆலயத்தில் அமைந்துள்ள சித்தர்குளத்தில் அமவாசை வழிபாடு நடந்தது. அதிகாலையிலேயே எராளமான பக்தர்கள் படித்துறையில் அமர்ந்து படையலிட்டு, மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ஈரோடு
தென்னகத்தின் காசி என்றழைக்கப்படுவதும், காவிரி, பவானி, கண்ணுக்கு தெரியாத அமுத நதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடமான, ஈரோடு மாவட்டம் பவானிகூடுதுறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், புனித நீராடினர். அங்குள்ள படித்துறையில் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
பின்னர் சங்கமேஸ்வரர் கோவிலில் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் ஈரோடு, சேலம் ,நாமக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி
தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, கடற்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.இதேபோல் தூத்துக்குடி துறைமுக கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய செண்பகவல்லியம்மன் பூவனநாதசுவாமி திருக்கோவில் தெப்பக்குளத்தில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து தப்பண வழிபாடு நடத்தினர்.
தேனி
தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில், தை அமாவாசையை முன்னிட்டு, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் பிண்டம் வைத்து எள் தண்ணீர் விட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதையொட்டி அருவிக்கு செல்ல கட்டணமின்றி இலவசமாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
காரைக்கால்
தை அமாவாசையை முன்னிட்டு புதுவை மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற நித்யகல்யாணப் பெருமாள் மற்றும் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் சுவாமிகள் கடற்கரையில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சமுத்திர தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்
புதுச்சேரி
தை அமாவசையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர், வரதராஜபெருமாள், முத்தியால்பேட்டை சுப்பிரமணியர் உள்ளிட்ட சுவாமிகளை கடற்கரைக்கு கொண்டு சென்று சிறப்பு அபிஷேகங்கள் செய்து தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.