காவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தமிழக போலீசார் கேரளாவில் பறிமுதல் செய்துள்ளனர். அந்த துப்பாக்கியில் மேட் இன் இத்தாலி என்று இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோரை போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வில்சனை சுட்டுக்கொன்ற துப்பாக்கி குறித்த தகவல்களை தெரிவிக்க கொலையாளிகள் மறுத்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர்கள் இருவரையும் போலீசார் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அங்கு நள்ளிரவு வரை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கழிவு நீரோடை ஒன்றில் துப்பாக்கியை வீசியதாக கொலையாளிகள் தெரிவித்தததை அடுத்து அங்கிருந்து துப்பாக்கியை கேரள போலீசார் உதவியுடன் கருங்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் அய்யர் உள்ளிட்ட காவல் துறையினர் மீட்டனர்.
ஐந்து தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கியில் ஐந்து தோட்டாக்கள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே தீவிரவாதிகளுக்கு போலி சிம்கார்டு வாங்கிக் கொடுத்த வழக்கில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் தமிழக க்யூ பிரிவு போலீசார், பெங்களூரில் 5 பேரையும், தமிழகத்தில் சிம் கார்டு விற்பனையாளர்கள் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். இவர்கள் தீவிரவாதிகளுக்கு போலி பாஸ்போர்ட்டுகள், வெளிநாட்டில் உள்ள தீவிரவாதிகளுடன் பேச மென்பொருள் ஆகியவற்றை தயாரித்துக் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
வழக்கு க்யூ பிரிவில் இருந்து என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட நிலையில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி சிம்கார்டுகள் மூலம் தீவிரவாதிகள் யார் யாருடன் தொடர்பு கொண்டுள்ளனர் எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வில்சனைச் சுட்டுக் கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கி சென்னை பெரியமேடு பகுதியில் இருந்து விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூரு க்யூ பிரிவு போலீசார் சென்னைக்கு வந்துள்ளனர்.
நேற்று இரவு வந்த சென்னை வந்த அவர்கள் பெரியமேடு பகுதியில் அமைந்துள்ள பல்வேறு தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மசூதிகள் என பல இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி விற்பனை செய்த இருவர் இங்கு பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலும், இவர்களை போன்று இன்னும் சிலர் சென்னையில் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு இருப்பதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.