களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் இருவரையும் கேரளா அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வரும் போலீசார், புதன்கிழமை நள்ளிரவு இருவரையும் கேரளா அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்கள் தங்கியிருந்ததாக சந்தேகப்படும் இடம், தவ்பீக்கின் உறவினர்கள், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகின்றனர்.
பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கையும் என்.ஐ.ஏவுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.