ஆயிரம் கோடி ரூபாய் செலவில், சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் அமையவிருக்கும் கால்நடைப் பூங்காவிற்கு, வருகிற 7ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற அதிமுக உள்ளாட்சித் தேர்தல் வெற்றிப் பொதுக்கூட்டத்தில், பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்றும் உயிரோட்டமாக உள்ள பாடல்கள் மூலம், நாட்டிற்கு வழிகாட்டியவர் எம்ஜிஆர் என்றார். ஆக்கப்பூர்வமான கருத்துகள் இல்லாததால், தற்போதைய திரைப்படங்களை பார்க்கும், பிள்ளைகள் கெட்டுப்போய்விடுவதாக அவர் கூறினார்.
அதிமுகவில் அனைத்து தொண்டராலும் முதலமைச்சராக முடியும் என்று கூறிய முதலமைச்சர், திமுகவில் அது சாத்தியமா? எனக் கேள்வி எழுப்பினார். ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா தலைவாசல் பகுதியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1886 ஏக்கரில் அமைய உள்ளதாகவும், அதற்கு, வருகிற 7ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சிறுபான்மையின மக்களை கண்ணின் இமைபோல காத்திட, அதிமுக அரசு உறுதிபூண்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்வின் இறுதியில் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விழா மேடையில், இஸ்லாமிய தம்பதியின் பெண் குழந்தைக்கு சனா எனப் பெயர் சூட்டினார்.