திரைப்பட நடிகரான ரஜினிகாந்த், தந்தை பெரியார் குறித்து பேசும் போது யோசித்து பேச வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலையத்தில் நடைபெற்றது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தோல்வி அடைந்த இடங்களுக்கு பொறுப்பான நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆளும் அதிமுக அரசின் தோல்விகள் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட பட்டியலை மக்களிடம் கொண்டு சேர்க்க கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், வரும் 24ம் தேதி திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். இதற்கிடையில் துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின், நண்பர் ரஜினிகாந்த் ஒரு நடிகர் என்றும் அவர் அரசியல் வாதி இல்லை எனவும் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்திற்காக 95 வயது வரை பாடுபட்ட தந்தை பெரியாரை பற்றி பேசும்போது ரஜினிகாந்த் யோசித்து பேச வேண்டும் என்றார்.