வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், டெல்டா மாவட்டங்களில் நேற்று பரவலாக மிதமான மழை பெய்ததாகவும், கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் பாண்டவையாறு மற்றும் நீடாமங்கலத்தில் அதிகபட்சமாக 5 செ.மீ மழை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகாலை நேரங்களில் மிதமான பனிமூட்டம் நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.