சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறையும் எனக் கூறி கொண்டுவரப்பட்ட பாஸ்டேக் முறையால், காத்திருக்கும் நேரம் 29 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் காத்திருக்கும் போது வீணாகும் எரிபொருளால், ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்தது. இதனை தவிர்ப்பதற்காகவும், ஆன்லைன் முறையில் கட்டணம் வசூலிக்க வசதியாகவும், பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டது.
பாஸ்டேக் வசதி கொண்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிப்பை ஸ்கேன் செய்வதன் மூலம், டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வாகனம் கடந்து செல்ல விரைவாக அனுமதிக்கப்படுவதால் காத்திருக்கும் நேரம் குறையும் என கூறப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக பாஸ்டேக்கால் காத்திருக்கும் நேரம் 29 சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய சுங்கச்சாவடி போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2019 நவம்பர் 15 முதல் டிசம்பர் 14 வரை, 488 சுங்கச்சாவடிகளில், வாகனம் ஒன்றுக்கு சராசரி காத்திருப்பு நேரம் 7 நிமிடங்கள் 44 விநாடிகளாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் டிசம்பர் 15 முதல், 2020 ஜனவரி 14 வரையிலான காலகட்டத்தில் சராசரி காத்திருப்பு நேரம் 9 நிமிடங்கள் 57 விநாடிகளாக அதிகரித்துள்ளது. அனைத்து வாகனங்களும் இன்னும் பாஸ்டேக் முறைக்கு மாறாததும், ஆன்லைன் பரிவர்த்தனையில் ஏற்படும் கோளாறுகளுமே பொதுவாக காத்திருப்பு நேரம் அதிகரித்திருப்பதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும் மாதாந்திர ஆய்வுகளின் படி உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் நெரிசல் மிகுந்த சுங்கச்சாவடிகளே காத்திருப்பு நேரம் அதிகரிப்புக்கு காரணம் எனவும், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இந்த அம்சத்தில் முன்னேற்றமடைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.