தென்காசி அருகே கடன் தொல்லை காரணமாக தாய், தந்தை மற்றும் இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெறவிருந்த அவர்களது மகன் மூவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கீழ ஆம்பூர் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த சந்தானம் பலசரக்குப் பொருட்களை விற்கும் ஏஜன்சி எடுத்து நடத்தி வந்தார். இவரது மனைவி லட்சுமி அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகவும் மகன் ஆரோக்கிய ஸ்ரீதர் ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
வரும் 27ஆம் தேதி ஆரோக்கிய ஸ்ரீதருக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மூவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். ஆன்லைன் வர்த்தகத்தில் பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஆரோக்கிய ஸ்ரீதர் முதலீடு செய்திருந்ததாகவும் அதில் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு, கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
பொங்கலன்று கடன் கொடுத்தவர்கள் ஆரோக்கிய ஸ்ரீதர் வீட்டுக்கே வந்து தகராறில் ஈடுபட்டதோடு, வீட்டு உபயோகப் பொருட்களையும் எடுத்துச் சென்றதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
இதனால் ஏற்பட்ட அவமானம், மன உளைச்சலிலேயே குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், ஆரோக்கிய ஸ்ரீதர் என்ன மாதிரியான ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார், யார் யாரிடம் எவ்வளவு கடன்கள் வாங்கினார், பொங்கலன்று வீட்டுக்கு வந்து தகராறு செய்தவர்கள் யார் என்ற விவரங்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.