கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா ((UAPA)) சட்டப்பிரிவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம், தவ்பீக் என்ற இருவர் கர்நாடகா மாநிலம் உடுப்பியில், சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். நேற்று அதிகாலை தக்கலைக்கு அழைத்துவரப்பட்ட அவர்களிடம் ஏ.எஸ்.பி. அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கேரளாவில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 25 பேர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்ததாகவும், அவர்களில் சிலருடன் தங்களுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர்களது வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த காஜா மொய்தீன், செய்யது அலி நவாஷ், மெகபூப் பாஷா ஆகியோர் கைதானதாகவும் செய்யது அலி கைது தங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பழி தீர்க்கவும், ஆத்திரத்தை தீர்க்கவும் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் 14 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அவர்களை காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே இந்த வழக்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா ((UAPA)) சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.