புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான காளைகளை, காளையர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். 16 காளைகளைப் பிடித்த வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்ற நிலையில், அலங்காநல்லூரில் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. டோக்கன் வழங்கப்பட்ட 700 காளைகளைப் பிடிக்க, பதிவு செய்யப்பட்ட 921 காளையர்கள் அதிகாலையிலேயே தயார்நிலையில் இருந்தனர்.
வீரர்கள் உறுதிமொழி ஏற்றபின், வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின் திமில்களை பிடித்து வீரர்கள் அடக்க முயன்றனர். பல காளைகள் இதில் சிக்கினாலும் சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் பல்வேறு கட்சியினரின் காளைகள் களம் கண்டன.
அமைச்சர் விஜயபாஸ்கரின் மூன்று காளைகளும், பிடிக்கவந்தவர்களை மிரட்டி, தெறித்து ஓடவிட்டன.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு இரு சக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளி காசுகள், அண்டாக்கள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.
இதேபோல் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
16 காளைகள் பிடித்த ரஞ்சித் குமாருக்கு முதல் பரிசாக முதலமைச்சரின் சார்பில் கார் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூரைச் சேர்ந்த அவருக்கு 4 கறவை மாடுகளும் பரிசாக அளிக்கப்பட்டன. அழகர் கோவில் ஆயத்தம்பட்டி கார்த்திக்கிற்கு 2 வது பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
யாரிடமும் பிடிபடாமல் சிறப்பாக விளையாடிய மார்நாடு என்பவரின் காளைக்கு முதல் பரிசும், புதுக்கோட்டை அனுராதாவின் காளை ராவணனுக்கு இரண்டாவது பரிசு அளிக்கப்பட்டது.
இதனிடையே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர், 36 பேர் காயம் அடைந்தனர்.