நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை இன்று முதல் அமுலுக்கு வந்த நிலையில், பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதால், ரொக்க கட்ட லேனில், செல்ல வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க மத்திய அரசு பாஸ்டேக் என்ற எலக்ட்ரானிக் பணம் செலுத்தும் முறையை கொண்டு வந்தது. அதன்படி வாகன உரிமையாளர்கள் வங்கிகளில் முன்கூடியே பணம் செலுத்தி ச்சிப் போன்ற பாஸ்டேக் ஸ்டிக்கர் பெற்று வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டிக்கொள்ளவேண்டும்.
இதன்மூலம் சுங்கச்சாவடிகளை வாகனம் கடக்கும் போது தானாகவே வாகன ஓட்டியின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் செலுத்தப்பட்டு விடும். இன்று முதல் பாஸ்டேக் கட்டாயமான நிலையில் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் லேனில் அதற்கு உரிய எலக்ட்ரானிக் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் நிற்காமல் செல்ல முடிந்தது. பாஸ்டேக் லேனில் எலக்ட்ரானிக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டன.
அதே சமயம் ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் பாக்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் செல்ல பிரத்யேக லேன்கள் உள்ளன. இதனால் கட்டண லேனில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், மொத்தம் உள்ள 6 லேன்களில், பாஸ்டேக் ஸ்டிக்கர் வாகனங்கள் செல்ல 4 லேன்கள் ஒதுக்கப்பட்டு, கட்டண லேன்கள் இரண்டு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் உள்ளிட்ட ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் பாஸ்டேக் லேனில் செல்ல அனுமதிக்கப்டாத நிலையில், அதில் நுழைந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
கட்டண லேனில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால், குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கட்டண லேனில் செல்ல 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மதுராந்தகம் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்ததையடுத்து, பாஸ்டேக் வாகனங்களுக்கு இருலேன்களும், கட்டண வாகனங்களுக்கு 3 லேன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஸ்டேக் லேனில் வாகனங்கள் விரைந்து செல்லும் நிலையில் கட்டண லேனில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, ஓமலூர், மற்றும் வைகுந்தம் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை இன்று அமுலுக்கு வந்துள்ளது .
மேட்டுப்பட்டி சுங்கச் சாவடியில் பாஸ்டேக் முறையில் தாமதமின்றி செல்லும் நிலையில், ரொக்க கட்டண லேனில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
இந்த வழியாக நாளொன்றுக்கு 16 ஆயிரம் வாகனங்கள் செல்வதாகவும், இதில் அரசு பேருந்துகள் உள்பட 50 சதவீதத்துக்கு மேல் பாஸ்டேக் எடுக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுக்கு தெரிவித்துள்ளதாக சுங்கச்சாவடி மேலாளர் பரமன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட்டில் பாஸ்டேக் முறையில் வாகனங்கள் செல்வதற்கு 3 லேன்கள் ஒதுக்கிய நிலையில், கட்டண வாகனங்களுக்கு ஒரு லேன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகில் உள்ள சுங்கச்சாவடியிள் 4 வழித்தடம் பாஸ்டேக் முறைக்கும், ஒரு வழித்தடம் கட்டணம் செலுத்தி செல்லவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணம் துவங்கும் முன் வங்கி கணக்கில் ரூபாய் 500 செலுத்தி ரீசார்ஜ் செய்த ஒருவருக்கு, அந்தப்பணம் பாஸ்டேக் கணக்கில் சேர தாமதம் ஏற்பட்டதால், அவர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சென்னையை அடுத்த வானகரம் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் முறையில் வாகனங்கள் உடனுக்குடன் செல்வதால் காலதாமதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதில் ஸ்கேன் ஆவதில் தாமதம் ஏற்படுவதாகவும், முழுமையாக பாஸ்டேக் முறைக்கு மாறும் வரை, கூடுதலாக கட்டண லேன்கள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில், பெரும்பாலான வாகனங்கள் பாஸ்டேக் முறைக்கு மாறாததால், அந்த வரிசைகள் காலியாக இருந்தன். ஒரு கட்டண வரிசையில் ஏராளமான வாகனங்கள் சென்றதால் நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்திருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் நான்கு தடங்கள், பாஸ்ட்டேக் முறைக்கும், ஒரு தடம் மட்டுமே ரொக்க கட்டண முறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வாகன ஓட்டிகள் பாஸ்டேக் முறைக்கு மாறாமல், ரொக்க கட்டண வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்தனர். அவர்கள் பாஸ்டேக் வழியை உபயோகப்படுத்த முயன்றதை தடுத்ததால் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தானியங்கி ஸ்கேனர்கள் இயங்காததால், ஊழியர்கள் மூலம் ஸ்கேனர்களை உபயோகிப்பதால் தாமதம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.