கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை போதிய அளவில் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த தங்களுக்கு அண்மையில் பெய்த மழை பெரிய அளவில் கைகொடுத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கும் தமிழக விவசாயிகள், அதே மகிழ்ச்சியோடு, பொங்கல் பண்டிகையையும் கொண்டாடத் துவங்கியுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மழையின் அளவு 440 மில்லிமீட்டர். ஆனால் அண்மையில் பெய்த மழை 450 மில்லிமீட்டராக பதிவானது. இது இயல்பைவிட 2 விழுக்காடு அதிகம்தான் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சற்று தாமதமாக அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதலாகவே பதிவானது.
வறட்சி மாவட்டம் என பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் பட்ட அவதி, கண்ணீரையே வரவழைக்கும் அளவுக்கு இருந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை இம்மாவட்ட மக்களுக்கு ஆறுதலைத் தந்திருக்கிறது.
இம்மாவட்டத்தின் பிரதான விவசாயமாக நெல் விவசாயம் இருக்கிறது. மாப்பிள்ளைச் சம்பா,கிச்செடி சம்பா, கோ 50, கோ-52 உள்ளிட்ட பல்வேறு நெல்வகைகள் மாவட்டம் முழுவதும் 1லட்சத்து 27 ஆயிரத்து 300 ஹெக்டேரில் விவசாயம் செய்யப்பட்டு, அறுவடைப் பணி நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடவுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
கரூர் மாவட்டம் புங்கோடை காளிபாளையத்தில் கடந்த 16 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பெரியசாமி என்ற விவசாயி, போதிய மழையும் காவிரி நீரும் கைகொடுப்பதால் 13 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பல்வேறு வகையான நெல் ரகங்கள், செழித்து விளைந்திருப்பதாகக் கூறுகிறார்.
ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்திருக்கும் நாகை மாவட்ட விவசாயிகள், சரியான நேரத்தில் கைகொடுத்த பருவமழையே அதற்குக் காரணம் என்கின்றனர். கடந்த ஆண்டில் 5 முறை நிரம்பிய மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால், எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் கிடைத்துள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சேர்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம், சிவத்தையாபுரம் ஆகிய கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை போதிய அளவு கிடைத்ததால், விளைச்சல் பல மடங்கு அதிகரித்துள்ளதாக மஞ்சள் விவசாயிகள் கூறுகின்றனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு தற்போது விவசாயிகள் அறுவடை செய்யப்பட்டு வரும் மஞ்சள், பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.