மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மதுரை அவனியாபுரத்தில் நாளையும், பாலமேட்டில் நாளை மறுநாளும், வெள்ளிக்கிழமை அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுகள் நடைபெறுகின்றன. அசம்பாவிதம் மற்றும் காயம் இல்லாமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவையொட்டி, கடந்த 3 நாட்களாக வாடிவாசல், ஜல்லிக்கட்டு மாடு செல்லும் பாதைக்காக தடுப்புகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. போட்டியில் பங்கேற்பதற்கான அனுமதிச் சான்று பெறுவதற்காக அதிகாலையிலிருந்தே ஏராமானோர் திரண்டிருந்தனர். மொத்தம் 700 காளைகளின் உரிமையாளர்களும், 730 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் விழா நேற்று உற்சாகத்துடன் நடைபெற்றது. நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் பங்கேற்று பந்தக்காலை நட்டு வைத்தார்.
இதனிடையே ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்கநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அவனியாபுரத்திற்கான ஒருங்கிணைப்பு குழுவில் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையரை கொண்ட குழு அமைக்க வேண்டும்மென்றும், அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டிற்கான ஒருங்கிணைப்பு குழுவில் மதுரை மாவட்ட ஆட்சியர், தென்மண்டல காவல்துறை தலைவர், மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குநர் ஆகியோர் இடம் பெற வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.