களிக்காவிளையில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொல்ல பயங்கரவாதிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்த ஆம்னி பேருந்து ஓட்டுநரை தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். மும்பையில் வாங்கிய 4 துப்பாக்கிகளில் ஒன்றை பயன்படுத்தி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்போடு தொடர்புடைய காஜாமைதீன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 2 பேர் கடந்த 10-ம் தேதி டெல்லி கைது செய்யப்பட்டனர்.
அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தமிழக கியூ பிரிவு போலீசாரால் பெங்களூரில் இம்ரான்கான் மற்றும் அவனது கூட்டாளிகள் இருவர் என 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் 8-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டம் களியகாவிளையில் பயங்கரவாதிகளால் உதவி ஆய்வாளர் வில்சன்சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்தடுத்த நாட்களில் நடந்த இந்த 3 சம்பவங்களுக்கும் தொடர்பிருப்பதையும், அல்ஹந்த் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தான் இவர்கள் என்ற மர்ம முடிச்சை தமிழக கியூ பிரிவு போலீசார் அவிழ்த்துள்ளனர்.
நேபாளம் காத்மண்டுவில் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தி தனித்தனி குழுக்களாக தாக்குதல் திட்டத்துடன் ஊடுருவிய பயங்கரவாதிகளை மோப்பம் பிடித்த தமிழக கியூ பிரிவு போலீசார், முதற்கட்டமாக பெங்களூரில் வைத்து 3 பேரை கைது செய்தனர். அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை தேட, இந்த அல்ஹந்த் பயங்கரவாத கும்பலுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பும் அம்பலமானது.
பயங்கரவாதி இம்ரான்கான் உட்பட கைதான 3 பேரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரித்ததில், தற்போது இஜாஸ் பாஷா என்பவனை கியூ போலீசார் பெங்களூரில் உள்ள கலாசிபாளையம் என்ற இடத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இஜாஸ் பாட்ஷாவை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இஜாஸ் பாஷா மும்பை - பெங்களூர் செல்லும் ஆம்னி பேருந்து ஓட்டுநர். இந்த பயங்கரவாத அமைப்பில் உள்ள மெகபூப் என்பவனோடு தொடர்பில் இருந்த இஜாஸ் பாஷா, ஆம்னி பேருந்தில் வைத்து கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்து இவர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளான். 8-ந் தேதி பெங்களூரில் பயங்கரவாதிகள் 3 பேஎ கைதாகும் போது கைப்பற்றப்பட்ட 3 துப்பாக்கிகளும், 89 துப்பாக்கிக் குண்டுகளும் இஜாஸ் பாஷா சப்ளை செய்தது தான்.
அவன் வாங்கி வந்த 4 துப்பாக்கிகள் 3 சிக்கிவிட, மற்றொரு துப்பாக்கி குறித்து விசாரித்த போது தான், மறுநாள் களியகாவிளையில் உதவி ஆய்வாளரை சுட்ட துப்பாக்கி தான் அது என்பது தெரியவந்துள்ளது. பெங்களூரில் சிக்கியவர்கள் 8-ந் தேதி கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்ததற்கு முன்பே, அவர்கள் கியூ பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் இருந்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து இருவர் மட்டும் தாக்குதல் திட்டத்துடன் தமிழகத்தில் நுழைந்த இந்த பயங்கரவாதிகளுக்கு,பெங்களூரில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. 3 பேரும் தமிழக போலீசார் வலையில் சிக்கிவிட்டனர் என்பது தெரியவர, அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்றிருக்கலாம் என யூகிக்கின்றனர் கியூ பிரிவு போலீசார்.
உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், துப்பாக்கி சப்ளை செய்த முக்கிய பயங்கரவாதி சிக்கியிருப்பதால் இன்னும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கின்றனர். அதே வேளையில் இந்த கும்பலைச் சேர்ந்த 11 பேர் தமிழக, கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிலீப்பர் செல் போன்று தலைமறைவாகவுள்ள அல்ஹந்த் அமைப்பு பயங்கரவாதிகளை பிடிக்க தென் மாநில காவல் துறை உஷார் நிலையில் உள்ளது.
இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டு கொலை செய்த தவுபீக் ,அப்துல் சமீம் என்ற இரண்டு பயங்கரவாதிகள் மாறு வேடத்தில் சுற்றி திரிந்தால் எப்படி இருப்பார்கள் என்ற பல உருவங்களிலான புகைபடங்களை கேரள போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் சுமார் நான்கு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.