தஞ்சை பெரியகோவிலில் கோபுர கலசங்களுக்கு தங்கமுலாம் பூசும் பணி தீவிரமடைந்துள்ளது.
தஞ்சை பெரியகோவிலில் அடுத்த மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோவிலில் உள்ள சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு, ரசாயன கலவை மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் பல்வேறு சன்னதிகளின் கோபுரங்கள் மற்றும் விமான கோபுரத்தில் இருந்த கலசங்கள் இறக்கப்பட்டு, தங்கமுலாம் பூசும் பணி நடந்து வருகிறது. மதுரையை சேர்ந்த செல்வராஜ் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோபுர கலசங்களை சந்திரகாந்த கல்லைக்கொண்டு சுத்தப்படுத்தி, மின்பகுப்பு முறை மூலம் தங்க முலாம் பூசப்படுவதாகவும், இந்த பணிகள் வருகிற 25-ந் தேதிக்குள் முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.