ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பை பார்ப்போம்...
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தூக்க நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின்போது அ.தி.மு.க. உறுப்பினர் வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட முயன்ற சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது வந்த அ.தி.மு.க. உறுப்பினர் வி.கே.நடராஜ் வாக்களிக்காமல் அங்கிருந்த வாக்குச் சீட்டுகளை கிழித்துப் போட்டுவிட்டு வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட முயன்றார். தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோர் அவரிடம் இருந்து வாக்குப் பெட்டியை மீட்டு வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த பருவாச்சி ஊராட்சி மன்றத்தில் 9 உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன. துணைத் தலைவர் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவரும் வாக்களிக்கத் தகுதியுடையவர். அந்த வகையில் மொத்தம் 10 வாக்குகளில், துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சுப்பிரமணி, அய்யணன் ஆகியோர் தலா 5 வாக்குகள் பெற்ற நிலையில் குலுக்கல் முறையில் சுப்பிரமணி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மறு தேர்தல் நடத்த வலியுறுத்தியும் அய்யணன் ஆதரவாளர்கள் சிலர் அங்கிருந்த செல்ஃபோன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அய்யணன் ஆதரவு உறுப்பினர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யப்போதாகக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செல்ஃபோன் டவரை விட்டு இறங்கி வந்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத் தலைவராக மனைவியும், துணைத் தலைவராக கணவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 18 உறுப்பினர் பதவியிடங்கள் உள்ளன. இவற்றில் 11 இடங்களில் தி.மு.க.வினரும், 5 இடங்களில் அ.தி.மு.க.வினரும் வெற்றி பெற்றனர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் சுயேச்சை ஒருவரும் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றனர். இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த உமா பிரியா வெற்றி பெற்றார். பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க. உறுப்பினரான பாலச்சந்தர் வெற்றி பெற்றார். பாலச்சந்தரும், உமாபிரியாவும் கணவன் - மனைவி என்பது குறிப்பிடத் தக்கது.