பெங்களூரில் கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளை 10 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளும், எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும் ஒரே ரகம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய காஜா மொய்தீன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் நவாஸ், சமீம் ஆகியோர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தலைமறைவானார்கள். தமிழகத்திலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய அளவில் நாச வேலைகளை செய்ய இவர்கள் சதி திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் தமிழக போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், காஜாமைதீன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் தமிழகத்திலிருந்து தப்புவதற்கு உதவி செய்த பெங்களூரைச் சேர்ந்த முகமது அனிபாகான், இம்ரான் கான் மற்றும் முகமது சையது ஆகிய மூன்று நபர்களை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கடந்த 7ஆம் தேதி கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காஜாமைதீன் தலைமையில் ஹல் ஹந்த் என ஒரு தீவிரவாத இயக்கம் உருவாக்கப்பட்டு, அந்த இயக்கத்தில் சுமார் 14 நபர்கள் உள்ளதாகவும், இந்த நபர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து நாச வேலைகள் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இருந்து தலைமறைவான காஜாமைதீன் நேபாளத்தின் காத்மாண்டு நகரில் ரகசிய இடத்தில் பதுங்கி அங்கே ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகவும், நாச வேலைகளுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை பதுக்கி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெங்களூரில் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி குண்டுகளும் கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குண்டுகளும் ஒரே ரகம் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வில்சன் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள தவ்ஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சந்தேகங்களை வலுவாக்கும் வகையில், காஜாமைதீன், சையது அலி நவாஸ், அப்துல் சமத் ஆகிய 3 நபர்கள் டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு நபர்களிடம் கிடைத்த தகவலை வைத்து, தமிழக உளவுப் பிரிவு போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த 3 பேரையும் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நேபாளத்தில் இருந்து டெல்லி வந்ததாகவும், டெல்லியில் நாசவேலைகள் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் மூன்று பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒன்றோடொன்று தொடர்புடையதாகவும், எஸ்.ஐ. வில்சன் கொலை உள்ளிட்ட விரிவான சதித் திட்டங்களுடனும் இவர்கள் இயங்கி வந்திருக்கலாம் என சந்தேகிக்கும் கியூ பிரிவு போலீசார், பெங்களூரில் சிக்கிய 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.
அவர்களை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 10 நாள் காவலில் விசாரிக்க, பெருநகர 2-வது குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதியிடம் அனுமதி பெற்றனர். இந்த 3 பேரையும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூரு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்ட 3 பேரில், சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் கொலையில் தொடர்புடைய 2 பேர் உள்ளனர். அவர்களை சென்னை கொண்டுவந்து விசாரணை நடத்த தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக தமிழக சிறப்பு பிரிவு எஸ்பி தலைமையில் தனிப்படை டெல்லிக்கு விரைந்துள்ளது.
இதனிடையே, அம்பத்தூர் இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்று தலைமறைவான காஜா மைதீன், அப்துல் சமீம், சையது அலி நிவாஸ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அம்பத்தூர் உதவி ஆணையர் தாக்கல் செய்த மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இதில் காஜாமைதீன் மற்றும் சையது அலி நவாஸ் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக அப்துல் சமீமை போலீசார் தேடி வருகின்றனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு தமிழ்நாட்டில் ஆள் சேர்த்த விவகாரத்தில் இவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து நிலுவையில் இருப்பதால், என்ஐஏ நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக பிணையில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.