மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் ஒன்றிய கவுன்சிலர் புவனேஸ்வரி, மறைமுக தேர்தல் நடைபெறும் இடத்துக்கு பாதுகாப்பு வழங்கவும், தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவும் கோரி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்த போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், நாளை நடைபெறும் தேர்தலுக்கு போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதுகுறித்து டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதனை ஏற்ற நீதிபதி, மறைமுக வாக்கு பதிவு மையங்கள் மற்றும் அதன் வளாகங்கள் முழுமைக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதோடு, வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.