மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்வது தொடர்பான சட்ட திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்காக ஏற்கெனவே அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில், வழக்கமான சட்டமாக இயற்றுவதற்கான மசோதாவை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.
நேரடி தேர்தல் முறையில், மேயர்கள் உள்ளிட்டோர் குறிப்பிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களாகவும் பெரும்பாலான உறுப்பினர்கள் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கும் போது மன்றத்தின் ஒத்துழைப்பைப் பெற முடிவதில்லை என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் மறைமுகமாக நடத்தப்பட்டால், மேயர்கள் உள்ளிட்டோரின் நிலைத்தன்மை மற்றும் கூட்டுப்பொறுப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மசோதாவுக்கு தொடக்க நிலையிலேயே தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவாதத்துக்குப் பின் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மேலும் மாநகராட்சிகள் நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்டங்களிலும் நிர்வாகத்துக்காக நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கும் வகையிலான திருத்தச் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.