மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள மறைமுக தேர்தல் முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த லலிதா என்பவர், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள மறைமுக தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா? என சந்தேகம் இருப்பதாகவும், ஆதலால் அத்தேர்தலை முழுமையாக வீடியோவாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதேபோல முதுகுளத்துரைச் சேர்ந்த முருகன் என்பவரும், வழக்கறிஞர் ஆணையர் குழு அமைத்து தேர்தல் முழுவதையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில் தேவைப்படும் இடங்களில் வீடியோ பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல என்றும், அனைத்து இடங்களிலும் தேர்தலை வீடியோவாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதிகள், அனைத்து இடங்களிலும் தேர்தலை வீடியோ பதிவு செய்யலாமே? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில், 11 தேதி நடைபெற உள்ள தேர்தல் முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்படும் என்றும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இதுகுறித்து இன்றே அறிவுறுத்தப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 21ம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
Watch More On>>https://www.polimernews.com/dnews/96115