திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சூப்பர் மார்கெட்டில் பொருட்களை திருடிச் செல்ல முயன்ற டிப்டாப் நபரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
ம.பொ.சி சாலையில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு டிப்டாப் உடையுடன் சென்ற ஒருவர் தனது முதுகு பைக்குள் மளிகைப் பொருட்களை அள்ளிப் போட்டுள்ளார். இதனை சிசிடிவி கேமரா திரையில் கண்ட ஊழியர், டிப்டாப் நபரை பிடித்து சோதனை செய்ய முயன்ற போது அவர் தப்பியோடினார்.
சிசிடிவி கேமரா காட்சிகளை முழுவதுமாக ஆராய்ந்த போது அந்த டிப்டாப் நபர், கடந்த ஆறு மாதங்களாக பெண் ஒருவருடன் வந்து இதே பாணியில் கைவரிசை காட்டியது கண்டு பிடிக்கப்பட்டது. இதுவரை 5 லட்சம் ரூபாய் அளவிற்கு பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.