ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடுவதோடு, சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் 2018-ஆம் ஆண்டு ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அமைச்சரவை பரிந்துரைத்த அடுத்த நாளே தன்னை விடுவிக்காமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாகவும் எனவே தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அனுமதி கேட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக அரசு அனுப்பிய மனுவை கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமர் பதவி வகித்தவர் உட்பட 15 பேர் கொல்லப்பட்ட வழக்கில் இவர்களை விடுவித்தால் சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது போன்று கொடூர குற்றத்திற்காக தண்டனை பெற்றவர்களை விடுவித்தால் அது மற்ற கைதிகளுக்கு சாதகமாகி விடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.