புதிய கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்தகங்கள் தரம் உயர்த்துதல் மற்றும் கால்நடை மருத்துவமனைகள் மேம்பாடு ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கால்நடை பராமரிப்புத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி கோவை, கடலூர், தருமபுரி, ஈரோடு, கரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 5000 கால்நடைகளுக்கு மேல் உள்ள 25 கிராம பஞ்சாயத்துகளில், புதிய கால்நடை மருந்தகங்கள் அமைக்க 3 கோடியே 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் 5 கால்நடை மருந்தகங்கள் தலா 50 லட்ச ரூபாய் வீதம், 2 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள 2 கால்நடை மருத்துவமனைகள், 2 கோடியே 40 லட்ச ரூபாய் செலவில் 24 மணி நேரமும் இயங்கும் பன்முக மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.