நாமக்கல்லில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை எழுதி வாங்கிக் கொண்டு தந்தையை கொடுமைப் படுத்திய மகனிடம் இருந்து அந்த வீட்டை மீட்டு, 71 வயதான தந்தையிடமே வருவாய் கோட்டாட்சியர் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாமக்கல் நடராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 71 வயதான நல்லுசாமி என்ற முதியவர், லாரிகளை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்தார்.
இவரது 2 மகன்கள் வெளிநாட்டில் வசிக்க, முதுமை காரணமாக தொழிலை விடுத்து, மூத்த மகனான வாசுதேவனின் குடும்பத்தாருடன் நல்லுசாமி, தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த வீட்டை தனது மகன் பெயருக்கு தான பத்திரமாக எழுதி வாங்கிக் கொண்ட வாசுதேவன், நல்லுசாமியின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைக் கேட்டு தொல்லை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மது குடிப்பதற்காக மகன் பணம் கேட்டு தொல்லை செய்ததாகக் கூறும் நல்லுசாமி, பணம் கொடுக்க மறுத்து வந்துள்ளார். மேலும் சரியாக உணவளிக்காமல் நாள்தோறும் மகன் துன்புறுத்தி வந்ததாகவும் வீட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியதாகவும் கூறி நல்லுசாமி, மாவட்ட ஆட்சியரை அணுகி வீட்டை மீட்டுத் தருமாறு மனு கொடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் கோட்டை குமார் பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டப்படி முதியவரின் வீட்டை மீட்டு அவரிடமே ஒப்படைத்தார்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p