2020ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தை அடுத்த 3 நாட்களுக்கு நடத்த, அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், நாளை காலை 10 மணிக்கு மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நாளை முன்மொழியப்பட்டு, விவாதம் தொடங்கும் என்றார்.
வரும் 8-ம் தேதி புதன்கிழமை மதியம் வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடரும். மேலும் அன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவார்.
அதனைத் தொடர்ந்து கடைசி நாளான 9ஆம் தேதி வியாழக்கிழமை அன்று முதல்வர் பதிலுரை வழங்குவார் என்று சபாநாயகர் கூறினார்.