ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்ட ஊழியர்களில் சிலருக்கு முறையாக உணவு வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதனால், ஒருசில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றதால், வாக்கு எண்ணிக்கை தாமதமானது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு உணவு மற்றும் தேநீர் வழங்கவில்லை என கூறி, தேர்தல் நடத்தும் அலுவலரை பணியாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு உணவு வழங்கவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலரை முற்றுகையிட்டு பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி, பழனி நெடுஞ்சாலையில், தேர்தல் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் பணியாளர்களிடம் மறியலால், வாக்கு எண்ணிக்கை அரை மணி நேரத்திற்கும் மேலாக காலதாமதமானது.
தருமபுரி ஒன்றியத்தில் 18 மற்றும் 8ஆவது வார்டில் திமுக முன்னிலையில் இருந்ததாகவும், திடீரென அதிமுக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறி, திமுக எம்.பி செந்தில்குமார் உள்ளிட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.