நெல்லை மாவட்ட நீதிமன்ற வாயிலில் வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் மர்மகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அண்ணன் கொலைக்கு பழிக்கு பழியாக தம்பி அரிவாள் எடுத்த பயங்கரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
நெல்லை மாவட்டம் நீதிமன்றத்திற்கு கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்திருந்த கீழ நத்தம் மேலூரை சேர்ந்த மாயாண்டி என்பவர் பட்டபகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி காட்சிகள் தான் இவை..!
மாயாண்டியை வெட்டிவிட்டு தப்பி ஓடிய 3 பேரும் சாலையின் எதிர்புறம் நின்ற கேரள பதிவெண் கொண்ட காரில் ஏறி தப்பிச்சென்றனர்
மாயாண்டியின் இடது கை துண்டிக்கப்பட்ட நிலையில் தலை முழுமையாக சிதைக்கப்பட்டிருந்தது. அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிணக்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கொலையாளிகளின் ஒருவனை பிடித்ததாக கூறிய போலீசார் , அந்த இளைஞரை தங்கள் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.
போலீசில் சிக்கியவர் பெயர் சுந்தரலிங்கம் என்கிற ராமகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. 7 பேர் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை அறங்கேற்றியதாக அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்
போலீசார் கண் முன்னால் நடந்த இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்த வழக்கறிஞர்கள், கொலையாளிகளில் ஒருவரையாவது துப்பாக்கியால் சுட்டிருந்தால் கொலையை தடுத்திருக்கலாம் என்று ஆதங்கம் தெரிவித்தனர்.
இதற்கிடையே கொலையாளிகள் தப்பிய கார் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையம் முன்பு வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மனோ என்கிற மனோராஜ், சிவா என்கிற சின்னதுரை,தங்கமகேஷ், முத்து கிருஷ்ணன் ஆகிய 4 பேர் சரண் அடைந்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கணேசன், கண்ணன் ஆகிய இருவரும் சிக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
கடந்த ஆண்டு கீழநத்தம் கவுன்சிலரான ராஜாமணி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாயாண்டி என்கிற பள்ள மாயாண்டி கைது செய்யப்பட்டார்.
ஜாமீனில் வெளியே வந்து கோவையில் இருந்த மாயாண்டி மீண்டும் நெல்லை திரும்பிய நிலையில் மற்றொரு வழக்கு அவர் மீது விழுந்தது. அந்த வழக்கில் ஆஜராவதற்கு வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றம் வந்தார் மாயாண்டி.
தனது நண்பரின் அழைப்பின் பேரில் தேநீர் அருந்த நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த சிறிது நேரத்தில், ராஜாமணியின் தம்பி மனோராஜ், தனது உறவினர்களுடன் சேர்ந்து மாயாண்டியை தீர்த்துகட்டியதாக போலீசார் தெரிவித்தனர். மாயாண்டியின் நண்பர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையே பட்ட பகலில் பலபேர் முன்னிலையில் நடந்த கொலை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை தனது சகோதரரின் சடலத்தை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று மாயாண்டியின் அண்ணன் மாரிச்செல்வம் தெரிவித்தார்
மேலும் போலீஸ் பாதுகப்பு மிகுந்த நீதிமன்றம் முன்பாக நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடதக்கது