கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அடுத்த பால்குளத்தில் உள்ள அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் மாரிமுத்து இவரது மனைவி மரிய சத்யா கறிக்கடையில் வேலை பார்த்து வந்த மாரிமுத்து வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் கையில் 3 டிராவல் பேக் களுடன் வீட்டில் இருந்து வெளியே கிளம்பினார்.
அவர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் வாசல் அருகே படுத்திருந்த தெரு நாய் ஒன்று அவரை நோக்கி குரைக்க ஆரம்பித்தது. திகைத்து நின்ற அவரை பின் தொடர்ந்த நாய், அவர் கையில் வைத்திருந்த பேக்கை கவ்விப் பிடித்து இழுத்ததால் அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டனர்.
வீட்டுக்கு வெளியே நாயுடன் மாரிமுத்து மல்லு கட்டுவதை பார்த்து அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர் பேக்கில் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தனர் இரண்டு பேக்குகளில் சிறிய அளவிலான பூட்டு போடப்பட்டிருந்தது. பூட்டப்படாத பேக்கை திறந்து பார்த்தபோது உள்ளே மனித உடல் பாகங்கள் இருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மாரிமுத்துவை மடக்கி பிடித்து அங்கு கட்டி வைத்து தரும் அடி கொடுத்தனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாரிமுத்து தனது மனைவி மரிய சத்யாவை கொலை செய்து , உடலை துண்டு துண்டாக வெட்டி அந்த உடல் பாகங்களை வெளியில் வீசுவதற்காக பேக்கில் வைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சேர்ந்த மாரிமுத்து மரிய சத்யா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மரிய சத்யா , ஆண் நண்பர்களுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மாரிமுத்து தனது இரு குழந்தைகளையும் விடுதியில் சேர்த்து விட்டு கடந்த 40 நாட்களுக்கு முன்பாக மனைவி மரிய சத்யாவை அழைத்துக் கொண்டு பால்குளம் பகுதிக்கு குடி பெயர்ந்ததாக கூறப்படுகிறது.
இங்கு வந்த பின்னரும் செல்போன் மூலமாக மனைவி தொடர்ந்து பலரிடம் பேசுவதை கண்டு ஆத்திரம் அடைந்த மாரிமுத்து மனைவியுடன் சண்டை யிட்டுள்ளார்.
சொல்பேச்சு கேளாத மனைவியை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட மாரிமுத்து வியாழக்கிழமை மதியம் கறிக்கடையில் இருந்து திரும்பியதும், கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு வீட்டில் டிவியை சத்தமாக ஓட விட்டுள்ளார்.
செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியை கறி வெட்டும் கத்தியால் வெட்டிக்கொலை செய்து சடலத்தை குளியல் அறைக்கு தூக்கி சென்றதாக கூறப்படுகின்றது.
அங்கு வைத்து அவரது உடல் பாகங்களை தலை, கைகள், கால்கள் என தனி தனி துண்டாக வெட்டியதாக மாரிமுத்து போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வெட்டப்பட்ட உடல் பாகங்களை தண்ணீரில் நன்றாக கழுவி அங்கேயே உலற வைத்ததாகவும், இந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் என்னவென்று கேட்டபோது, தான் துணி காய போடுவதற்காக சுவற்றில் ஆணி அடித்ததாக கூறி சமாளித்துள்ளார்
இருந்தாலும் அவர் எடுத்துச் சென்ற பேக்கில் இருந்து வந்த ரத்த வாடையால் நாய் அவரை மறித்து இடைவிடாமல் குரைத்துக் காட்டி கொடுத்து விட்டது என்கின்றனர் காவல்துறையினர்.
மனைவி மீதான தீராத சந்தேகத்தால் இந்த கொடூர சம்பவத்தை மாரிமுத்து செய்து இருப்பதாக கூறும் காவல்துறையினர் இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெட்டுக்கத்தியை பறிமுதல் செய்துள்ளனர்.