சஸ்பெண்டை எதிர்த்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது அதில் தனது தரப்பு வாதத்தை முன் வைக்காமல் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்த சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உதவி பொறியாளராக 2012 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த செல்வநாயகம் என்பவருக்கு, 2023 ஆம் ஆண்டு உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து செல்வநாயகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சஸ்பெண்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தபோது, சென்னை பெருநகர வளர்ச்சி குழும துணைத் தலைவரால், உதவி செயற்பொறியாளராக நியமிக்கப்பட்ட செல்வ நாயகத்தை சஸ்பெண்ட் செய்ய உறுப்பினர் செயலருக்கு அதிகாரம் இல்லை என்றும் வழக்கு நிலுவையில் இருந்த போது சஸ்பெண்ட் உத்தரவை உறுப்பினர் செயலர் ரத்து செய்தது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் செல்வநாயகம் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, செல்வநாயகத்தின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, உடனடியாக பணியில் சேர செல்வநாயகத்திற்கு உத்தரவிட்டார்.
மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் தனது தரப்பில் விளக்கத்தை அளிக்காமல், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்த பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலரின் செயல், நீதிமன்ற அவமதிப்பு என குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.