கோவையில் ஜெனரேட்டருக்கு டீசல் ஊற்றிய போது ஏற்பட்ட தீவிபத்தில், மாமியார் சடலம் வைக்கப்பட்டிருந்த பிரீசர் பாக்ஸ் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்த மருமகள் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கோவை கணபதி கே ஆர் ஜி நகரை சேர்ந்தவர் முருகு சுப்பிரமணியம். தனியார் பள்ளி ஒன்றில் மேலாளராக உள்ளார். இவரது தாயார் ராமலட்சுமிக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக உயிரிழந்த ராமலட்சுமியின் உடலை பிரீசர் பாக்ஸில் வைத்திருந்தனர். அவரது மருமகள் பத்மாவதி உள்ளிட்ட உறவினர்கள் எல்லாம் அதனை சுற்றி அமர்ந்து அழுது கொண்டு இருந்தனர். காலை 10;30 மணி அளவில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.
அந்த அறை கும்மிருட்டு ஆனதால் , உடனடியாக அங்கு ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் பிரீசர் பாக்ஸுக்கும், வெளிச்சத்திற்காக லைட்டுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து ஜெனரேட்டர் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஊழியர் ஒருவர் வந்து ஜெனரேட்டருக்கு டீசல் ஊற்றினார்.
அப்போது ஜெனரேட்டரில் ஏற்பட்ட அதிர்வால் டீசல் சிதறி ராமலெட்சுமியின் தலைக்கு பக்கத்தில் பிரீசர் பாக்ஸின் அருகில் வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கு மீது பட்டதால் தீ குப்பெண்று பற்றியதாக கூறப்படுகின்றது. இதில் ராமலெட்சுமியின் மருமகள் பத்வாவதி உள்ளிட்ட 4 பேர் பிரீசர் பாக்சோடு சேர்ந்து தீயில் சிக்கி உடல் கருகினர்.
உறவினர்கள் போராடி தீயை அணைத்து 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே பத்மாவதி உயிரிழந்தார். 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மாமியார் இறந்த அதே நாளில் மருமகள் திடீர் தீப்பற்றி கருகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெனரேட்டர் ஓடிக் கொண்டிருக்கும் போதே டீசல் ஊற்றியது தான் இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.