திருச்சி ஸ்ரீரங்கத்தில் கொல்லப்பட்ட ரவுடியின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் விதமாக, மனைவியின் கண்ணெதிரே ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீரங்கம், அடையவளஞ்சான் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு என்கிற சந்திரமோகன். இவர் கடந்த, 2020-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.
சந்துரு கொலை வழக்கில் கைதாகி பிணையில் உள்ள ஆட்டுக்குட்டி சுரேஷ் என்பவர் தனது மனைவி ராகினியுடன் நவல்பட்டு பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு, இருச்சக்கர வாகனத்தில் இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
இரவு சுமார் 7.40 மணியளவில், திருவானைக்காவல் அம்பேத்கர் நகர் சுடுகாடு தேங்காய் குடோன் அருகே மற்றொரு இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் சுரேஷ் ஓட்டி வந்த இருச்சக்கர வாகனம் மீது மோதினர். இதில், சுரேஷ் அவரது மனைவி ராகினி இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர்.
அடுத்த சில நொடிகளில் இருசக்கர வாகனத்தில் வந்த மேலும் 4 பேர் ஆட்டுக்குட்டி சுரேஷை சூழ்ந்து கொண்டு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தன் கண் முன்னே கணவன் வெட்டிக் கொல்லப்பட்டதைக் கண்டு ராகினி கதறி அழுதார். சுரேஷைக் கொன்றுவிட்டு தப்பியோடிய கொலையாளிகளில் 6 பேர் பிறகு போலீஸாரிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் திருச்சியில் 14 கொலைகள் அரங்கேறியுள்ள நிலையில் ஸ்ரீரங்கம் பகுதியில் மட்டும் இதுவரை 10 கொலைகள் நடைபெற்றுள்ளன. கொலைகள் பெரும்பாலும் இரு குழுக்கள் இடையே யார் பெரியவர் என்ற Ego-வினால் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.