மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கப்பட்ட புத்தகத் திருவிழாவில் பக்திப் பாடலுக்கு கருப்பசாமி வேடமிட்டு நடனம் ஆடியவரை கண்டு அரசுப் பள்ளி மாணவிகளும் போட்டிபோட்டு தங்களை மறந்து சாமியாடியதால் பரபரப்பு ஏற்பட்டது
புத்தக கண்காட்சியில் பக்தி பாடலை கேட்டதால் பரவச நிலையை அடைந்து பள்ளி மாணவிகள் சாமி ஆடிய காட்சிகள் தான் இவை..!
மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் புத்தக கண்காட்சியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மேயர் இந்திராணி ஆகியோர் தொடங்கிவைத்தனர். அரசு நிகழ்ச்சி என்பதால் பள்ளிக்கல்வித் துறையில் அறிவுறுத்தலின் பேரில் அருகில் உள்ள காக்கை பாடினியார் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுடன் இரு ஆசிரியர்கள் மட்டும் வந்திருந்தனர். தொடக்க விழா நிகழ்ச்சியாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது “அங்கே இடிமுழங்குது” என்ற பக்தி பாடலுக்கு கருப்பசாமி வேடமிட்டு ஒருவர் கையில் அரிவாளோடு உக்கிரமாக ஆடினார்.
அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த பள்ளி மாணவிகள் பக்தி பாடலை கேட்டு பரவச நிலைக்கு சென்று தங்களை மறந்து சாமி ஆட தொடங்கினர், அவர்களை அடக்க இயலாமல் ஆசிரியர்களும் மாணவிகளும் அல்லோலப்பட்டனர்
அப்போது சில மாணவிகள் களைப்படைந்து மயங்கி விழுந்ததால், அங்கிருந்த பொதுமக்கள் அவர்களுக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து இருக்கையில் அமர வைத்தனர்
இவ்வளவு களேபரத்துக்கும் நடுவில் மாணவர்களோ விசில் அடித்து சாமி ஆடிய மாணவிகளை உற்சாகப்படுத்தினர்
அப்போது அங்கு இருந்த சிலர், அரசின் நிகழ்ச்சியில் பக்தி பாடல் போட்டது ஏன் ? என்று பகுத்தறிவுடன் கேள்வி எழுப்பி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். மாணவிகளின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த விழா ஏற்பட்டாளர்கள்
கலை நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்துசெய்துவிட்டு, விட்டால் போதும் என்று இடத்தை காலி செய்தனர்.
சென்னையில் இரு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவுக்கு அனுமதி வழங்கியதற்காக தலைமை ஆசிரியர்கள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மக்கள் முன்னிலையில் மாணவிகள் பக்தி பாடலுக்கு சாமி ஆடிய நிகழ்வால் , யார் யாருக்கு இடி விழபோகிறதோ ? என்று நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் ஆசிரியர்களும் கலக்கத்தில் உள்ளனர்.