வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் துக்க வீடுகளில் சடலங்களை மயானத்துக்குத் தூக்கிச் செல்லும் நேரத்தைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
குடியாத்தம் கோட்டசுப்பையா தெருவில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த மூதாட்டி ஒருவரின் சடலத்தை உறவினர்கள் மயானத்துக்குத் தூக்கிச் சென்றனர். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர், மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்து பீரோவைத் திறக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்த பெண்கள் கூச்சலிடவே, சடலத்துடன் சென்றவர்கள் திரும்பி வந்து அந்த நபரைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கர்நாடகாவைச் சேர்ந்த முனிராஜ் என்ற அந்த நபர், குடியாத்தத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்ததும், துக்க வீடுகளைக் குறிவைத்து திருடி வந்ததும் தெரியவந்தது.