திருச்சியில் 7 வயதுச் சிறுமி 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய நிலையில், தொண்டைக்குள் காமிராவுடன் கூடிய கருவியை செலுத்தி நாணயத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்
திருச்சி மாவட்டம் மணமேடு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசுவின் 7 வயது மகள் கிருத்திகா. அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் கிருத்திகா,
சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் தனது தந்தையிடம்
தின்பண்டம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
திருநாவுக்கரசு 5 ரூபாய் நாணயத்தை கொடுத்து கடையில் தின்பண்டம் வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். கடைக்கு சென்ற சிறுமி 5 ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விளையாடியபடி நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நாணயத்தை சிறுமி விழுங்கியதாக கூரப்படுகின்றது . மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தனது தந்தையிடம் ஓடிவந்து நாணயத்தை விழுங்கிவிட்டதாக கூறியுள்ளார் சிறுமி கிருத்திகா.
இதனால் பதறி துடித்த திருநாவுக்கரசு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நாணயத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் தொண்டைக்குள் சிக்கிய நாணயம் மேலும் கீழே உள்ளே சென்று விட்டதாக கூறப்படுகின்றது
சிறுமியை காப்பாற்ற உடனடியாக முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிறுமி கிருத்திகா அனுமதிக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் சிறுமிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது உணவுக்குழாய் பகுதியில் நாணயம் செங்குத்தாக சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.
சிறுமி மூச்சுத் திணறலால் அவதியுற்றதால், சர்ஜிகல் கேஸ்ட்ரோ எண்ட்ராலஜி துறைத் தலைவர் கண்ணன் தலைமையில் மருத்துவர்கள் கார்த்திகேயன், ராஜசேகர், சங்கர் ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழு சிறுமியின் உணவு குழாயில் அடைபட்டு நின்ற நாணயத்தை நவீன முறையில் வெளியே எடுக்க திட்டமிட்டனர். அதன்படி சிறுமியின் வாய் வழியாக தொண்டைக்குள் மருத்துவர்கள் அனுப்பிய நுண்ணிய காமிராவுடன் கூடிய கருவி, உணவுக்குழாயில் சிக்கியிருந்த 5 ரூபாய் நாணயத்தை கவ்விப்பிடித்து வெளியே கொண்டு வந்தது.
அந்த நாணயத்தை வெளியே எடுத்த நிலையில் சிறுமி தற்போது நலமுடன் உள்ளார். பெற்றோர் சிறுவர் சிறுமிகளிடம் நாணயத்தை கொடுக்கும் போது வாயில் போட்டு விளையாடக்கூடாது என்று அறிவுறுத்தி அனுப்ப வேண்டும் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.