பொன்னேரியில் உள்ள அரசு கல்லூரியில் காமராஜர் துறைமுக நிறுவனத்தால் 5.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டிக்கொடுக்கப்பட்ட கட்டிட திறப்பு விழாவுக்கு அழைப்பு இல்லாததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ துரை சந்திரசேகர், துறைமுகசபைத் தலைவரை மறித்து வாக்குவாதம் செய்து கருப்பு கொடியுடன் கோஷமிட்டார்...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் காமராஜர் துறைமுக நிறுவனத்தில் 5.25 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. கட்டிடத்திறப்பு விழாவுக்கு அழைப்பு அனுப்பபடாவிட்டாலும், விழாவுக்கு முன் கூட்டியே வந்த எம்.எல்.ஏ துரைசந்திரசேகர் பேனரில் கூட தனது பெயர் இல்லாததை கண்டு கோபத்தில் வாசலில் காத்திருந்தார்.
அப்போது திறப்பு விழாவுக்கு வருகை தந்த காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் ஐஏஎஸ்சை மறித்து வாக்கு வாதம் செய்து உள்ளே போகவிடாமல் தடுத்தார்.
அவர் காரில் இருந்து இறங்கி கல்லூரிக்குள் நடந்து சென்றார். கல்லூரிக்குள் சென்ற சுனில் பாலிவால் ஐ.ஏ.எஸ் ,மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்தியா ஆகியோர் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
தன்னை சட்டை செய்யாமல் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதால், ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் உடனடியாக கூட்டணிக் கட்சியினரை கருப்புக்கொடியுடன் வரவழைத்தார். புதிய கட்டிட வாசலில் நின்று கொண்டு சுனில் பாலிவாலிலை கண்டித்து எதிர்ப்புக் கோஷமிட்டனர்..
இந்த கட்டிடம் மத்திய அரசின் துறைமுக நிறுவனத்தால் கட்டிக் கொடுக்கப்படுவதால் எம்.எல்.ஏவை அழைக்கவில்லை என்று மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்தியா சமாதானம் தெரிவித்த நிலையில், அதனை ஏற்க மறுத்து அவரிடம் எம்.எல்.ஏவும், ஆதரவாளர்களும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து கோஷம் மிட்டுக்கொண்டே இருந்ததால், திறப்பு விழா நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர்கள் அங்கே இருந்து புறப்பட்டுச்சென்றனர். அப்போதும் எம்.எல்.ஏவும் ஆதரவாளர்களும் கோசமிட்டபடியே அவரது வாகனத்தை பின் தொடர்ந்தனர்.