திண்டுக்கல் அருகே அதிவேகத்தில் தறிகெட்டு சென்று சாலையின் செண்டர் மீடியனை தாண்டி பாய்ந்த தொழில் அதிபரின் கார் மோதி 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிவேகத்தால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
திருச்சி தொழில் அதிபரின் கார் மோதியதால் திண்டுக்கல் - நத்தம் சாலையில் சடலங்கள் சிதறிக்கிடக்கும் கோரக்காட்சிகள்தான் இவை..!
திருச்சியைச் சேர்ந்த தொழில் அதிபர் குணசேகரன். இவர் கோபால்தாஸ் இண்டஸ்ரியல் சர்வீசஸ் என்ற நிறுவனத்தை தனது மகனான என்ஜினீயர் கவுதமுடன் இணைந்து நடத்திவருகிறார். சனிக்கிழமை மதியம் துவரங்குறிச்சி நோக்கிச்சென்ற இவர்கள், நிறுவனத்தி ஃபோக்ஸ்வேகன் காரை பிரவீன்குமார் என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார். காரில் குணசேகரனின் மனைவி இருந்ததாக கூறப்படுகின்றது.
நத்தம் சாலையில் நல்லாம்பட்டி பிரிவு அருகே அதிவேகத்தில் சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து செண்டர் மீடியனை தாண்டி எதிர்புறம் பாய்ந்தது. பாய்ந்த வேகத்தில் இரண்டு இரு சக்கரவாகனங்கள் மீது பயங்கரமாக மோதியதில் அதில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டையும் நசுங்கிக்கொண்டு பாலத்தடுப்பில் மோதி அந்த கார் நின்றது.
இந்த கோர விபத்தில் சொந்த ஊரான தென்காசிக்கு செல்வதற்காக ரெயில் நிலையம் நோக்கி இரண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ரெண்டலைப்பாறை பகுதியை சேர்ந்த ஜார்ஜ், மனைவி அருணா மற்றும் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலத்த காயங்களுடன் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜார்ஜின் மாமியார் சரோஜா மேரி பரிதாபமாக உயிரிழந்தார். தங்கள் குடும்பமே கார் ஓட்டுனரின் அதிவேகத்தால் நிர்மூலமானதை கண்டு இளைஞர் கதறித்துடித்தார்.
காரின் முன்பக்க கண்ணாடிக்கு அருகில் அரசு மருத்துவர் என்ற போர்டு வைக்கப்பட்டிருந்தது. 5 பேரை பலி கொண்ட இந்த கோர விபத்துக்கு காரணமான கார் யாருடையது என்பதையும், காரில் வந்தவர்கள் யார் என்பதையும் போலீசார் முதலில் தெரிவிக்க மறுத்து விட்டனர். காரின் பதிவெண்ணை வைத்து காரின் உரிமையாளரை கண்டுபிடித்த செய்தியாளர்கள், போலீசார் காரை ஓட்டி வந்தவரை தப்பவைக்க முயற்சிப்பதாக புகார் கூறியதால், காரை ஓட்டிவந்தவர் பிரவீன்குமார் என்றும் அவரை கைது செய்திருப்பதாகவும் அறிவித்தனர்.
கார் ஓட்டுனரின் அதிவேகத்தின் காரணமாக இந்த கோர விபத்து நடந்திருப்பதாகவும், வருங்காலங்களில் இது போன்ற விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தெரிவித்தார்.