கடலூர் மாவட்டம் வடலூர் அருகே சீயோன் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின் போது மாணவர்கள் எறிந்த ஈட்டி, சிலம்பம் விளையாடிக் கொண்டிருந்த மாணவனின் தலைமீது பாய்ந்ததில் அவன் மூளை சாவு அடைந்ததால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கிஷோர், 15 வயதான இவர் அந்த பகுதியில் உள்ள சீயோன் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். சிலம்பத்தில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ள கிஷோர், கடந்த 24 ந்தேதி மாலை பள்ளியில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்
பள்ளியின் விளையாட்டு மைதானம் மிகக்குறுகிய பகுதி என்பதால் பல்வேறு விளையாட்டுகளுக்கு மாணவர்கள் அருகருகே பயிற்சியில் ஈடுபட்டு கொட்டிருந்தனர். அப்போது ஈட்டி எறிதல் போட்டிக்காக மாணவன் வீசிய ஈட்டி தவறுதலாக , சிலம்பம் ஆடிக் கொண்டிருந்த மாணவன் கிஷோரின் தலையில் குத்தி பாய்ந்ததாகவும், சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி சரிந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதையடுத்து உயிருக்கு போராடிய மாணவன் கிஷோரை சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையிலும் கிஷோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் அங்கிருந்து விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கிஷோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தனது மகன் மூளைச்சாவு அடைந்ததை கேள்விப்பட்டு அவரது தாய், விஷம் குடித்து விபரீத முடிவெடுத்தார் அவரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்தை மறைக்க முயன்றதாக தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது உறவினர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்கள் பலவித விளையாட்டுக்களை கற்றுக்கொள்ள நெருக்கமான இடத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது ஏன் ? என்பது குறித்தும், சிறுவன் மீது ஈட்டி பாயும் அளவுக்கு கூர்மையாக இருந்ததா ? என்பது குறித்தும், பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு என்னென்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.