புதுக்கோட்டை அண்ணா சிலையை சுற்றி அமைக்கப்பட்ட இரும்புக்கூண்டு மீது ஏறி படுத்துக் கொண்டு இறங்க மறுத்து அலம்பல் செய்த குடிமகனை , போலீசார் போராடி கீழே இழுத்துப்போட்டதால் , அவரது முகம் மற்றும் கழுத்தில் ரத்தக் காயம் ஏற்பட்டது
டாஸ்மாக் மகிமையால் போதை ஏறிய மகிழ்ச்சியில் அண்ணா சிலையின் தலைக்கு மேல் இரும்பு கூண்டில் படுத்து அலம்பல் செய்த குடிமகன் இவர் தான்..!
புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள அண்ணா சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கூண்டின் மீது ஏறி போதை ஆசாமி ஒருவர் படுத்துக் கொண்டு அலம்பல் செய்வதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
மேலே படுத்திருந்த குடிமகனார் இறங்க மறுத்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்
பொதுமக்களின் உதவியுடன் குடிமகனை கீழே இறக்க போலீசார் முயன்றனர், கம்பிகளை இறுகப்பற்றிக் கொண்டு பல்லி போல ஒட்டிக் கொண்டதால், அவரை கீழே இழுத்து போட்டனர்
இதில் அவரது கழுத்து முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது, இதையடுத்து தனக்கு நீதி வேண்டும் என புலம்பியபடியே இருந்த அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
இதே போல திருப்பூரில் தலைக்கவசம் அணியாமல், போதையில் வாகனம் ஓட்டி வந்த ரமேஷ் என்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் ஆக்ரோசமாகி போக்குவரத்து உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உதவி ஆய்வாளரின் செல்போனை தட்டி விட்டு அடங்க மறுத்து அட்ராசிட்டி செய்த ரமேஷ் மீது புகார் அளிக்கப்பட்டது
போலீசாரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட ரமேஷை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.