கரூர் அடுத்த அய்யர்மலையில் புதிதாக தொடங்கப்பட்ட ரோப்காரில் பக்தர்கள் சிக்கிக் கொண்டு அந்தரத்தில் தவித்ததால் கண்ணீர் விட்டு கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்
அய்யர் மலை ரோப்காரில் சிக்கி அந்தரத்தில் கண்ணீர் விட்டு கதறிய பக்தர்களின் தவிப்பு காட்சிகள் தான் இவை..!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ஒன்பது கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் ரோப் கார் திட்டம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது
வியாழக்கிழமை மதியம் 2:30 மணி அளவில் அய்யர் மலையில் இருந்து கீழ்நோக்கி வந்த நான்கு பெட்டியில் பக்தர்கள் பயணம் செய்த போது அதிக அளவு காற்று வீசியதால் ரோப் காரின் கம்பிகள் வீல்களை விட்டு தடம் புரண்டதால் ரோப் கார் அந்தரத்தில் நின்றது. இதனால் இரு புறங்களில் பயணம் செய்த பக்தர்கள் ரோப் காருக்குள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்
மேல் இருந்து கீழ்நோக்கி வந்த நான்கு பெட்டிகளில் இரண்டு பெட்டிகளில் இருந்த மூன்று பெண்கள் , ரோப்கார் அந்தரத்தில் நின்றதால் புலம்பியவாறு இருந்தனர். கண்ணீர் விட்டு கதறி அழுததால், கீழிருந்த பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கீழ் பகுதியில் இறங்க இயலாமல் தவித்த எட்டு நபர்களையும், பணியாளர்கள் ஏணி மூலம் பாதுகாப்புடன் இறக்கினர்
மேல் பகுதியில் சிக்கியவர்களை மீட்க ரோப் கார் திட்ட பணியாளர்கள் தடம் புரண்ட ரோப் கார் கம்பியை சரி செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
2 மணி நேரத்துக்கு பின்னர் கம்பி வடம் சரி செய்யப்பட்டு பக்தர்கள் 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தொடங்கப்பட்ட 2 வது நாளே, ரோப்கார் பழுது ஏற்பட்டதால் அதன் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது