நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் மது போதையில் வாகனம் ஓட்டி வந்து போலீசில் சிக்கிய போதை ஆசாமி ஒருவர், தன் மீது வழக்கு பதிவு செய்த போலீசாரிடம் வம்பிழுத்து ரகளையில் ஈடுபட்டதால் ஜீப்பில் தூக்கிப் போட்டு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பள்ளி சாலையில் வியாழன் மாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷாஜகான் மற்றும் போக்குவரத்து போலீசார் 4 பேர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த ஓனான் பரப்பு என்ற ஊரைச் சேர்ந்த வீரமணி என்பவர் அதிகளவில் மது அருந்தி வந்ததாக கூறப்படுகின்றது. அவரை தடுத்து நிறுத்திய போலீசார் குடி போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்தனர் . அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வீரமணி..!
போலீசாரை ஒருமையில் பேசி ரகளையில் ஈடுபட்டார் அந்த போதை வீரன்..! குடிச்சா ஃபைன் போடுவீங்களா ? அப்ப ஒயின் ஷாப் எதுக்கு திறந்து வைத்திருக்கிறீர்கள் ? என்று கேள்வி எழுப்பினார்
தண்ணி போட்டுட்டு ரோட்டுல தான் வண்டி ஓட்டி வருவோம்.. என்று அலப்பறையை கிளப்பியதோடு போலீசுக்கு சவால் விட்ட வீரமணியை, அவருடைய மனைவி தாய் உள்ளிட்டோர் தடுத்தனர். போலீசார் அவரை வீட்டுக்குப் போக சொல்லி எச்சரித்தும் அவர் கேட்கவில்லை
அவரை அழைத்துச்செல்ல வந்த சட்டம் ஒழுங்கு போலீசாரிடம் வம்பிழுத்து தனது பனியனை தானே கிழித்துக் கொண்டு தனக்கு புது சட்டை வாங்கி தரும்படி போலீசாரை டார்ச்சர் செய்தார்
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த போலீசார் அடங்காத காளையாய் துள்ளிக்குதித்த வீரமணியை , போராடி குண்டுக்கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்