கடலூர் அருகே ஐ.டி ஊழியர் குடும்பத்துடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், ஐ.டி.ஊழியருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொடுத்து விட்டு பிரிந்து சென்ற பெங்களூருவைச் சேர்ந்த ஐ.டி பெண் ஊழியரை வரவழைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
கடலூர் மாவட்டம், காராமணி குப்பத்தில் வசித்த ஐ.டி. ஊழியர் சுகந்த் குமார், அவரது தாய் கமலேஸ்வரி, 10 வயது மகன் நிஷாந்த் ஆகியோர் கொடூரமாக கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 தனி படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சுகந்த்குமார் காதலித்து 2-வது திருமணம் செய்ததாக கூறப்பட்ட அஞ்சும் சுல்தானா என்ற பெங்களூரு ஐ.டி ஊழியரை அழைத்து வந்து விசாரித்த போது பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.
பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த சுகந்த் குமார் சென்னையில் தங்கி பணிபுரிந்த போது டில்லி என்ற பெண்ணை காதலித்து மணந்ததாகவும் அவரை 6 மாதத்தில் பிரிந்ததாகவும் அஞ்சும் சுல்தானா கூறியுள்ளார். பின்னர் பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்த போது சுகந்த் குமாருக்கும், தனக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் லிவிங் டு கெதர் உறவில் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ள சுல்தானா, தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்த போது சுகந்த் குமாருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்போது சுகந்த் குமார் மூலம் பிறந்த குழந்தை தான் கொல்லப்பட்ட நிஷாந்த் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது வீட்டில் ஒரு மகன் இருப்பதால் இவனையும் தன்னால் வளர்க்க இயலாது என்று குழந்தையாக இருக்கும் போதே நிஷாந்த்தை சுகந்த்குமாரிடம் ஒப்படைத்து விட்டதாக சுல்தானா தெரிவித்துள்ளார். வாரத்தில் ஒரு நாள் நிஷாந்துடன் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசுவது வழக்கம் என்று கூறியுள்ள அவர், சுகந்த் குமாரும், குழந்தையும் கொல்லப்பட்ட தகவல் தெரிவித்ததால் துபாய் சென்றுவிட்டு திரும்பிய நிலையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானதாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சுகந்த் குமாருக்கு ஹைதராபாத்திலும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக விசாரணையில் அவர் தெரிவித்ததால் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். மேலும் சுகந்த் குமார் வீட்டில் இருந்த கார் ஓட்டுனரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.