திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடச்சென்ற இடத்தில் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டவர்களுடன் உற்சாகமாக போஸ் கொடுத்த நடிகை ரோஜா, அருகில் நின்று போட்டோ எடுக்க ஆசைப்பட்ட தூய்மை பணியாளார்களை பார்த்து முகத்தை சுழித்து தள்ளி நிற்க சொன்ன சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எல்லா ரசிகர்களுடனும் உற்சாகமாக செல்ஃபிக்கு போஸ் கொடுத்த நடிகை ரோஜா தூய்மை பணியாளர்களை கண்டதும் தனது முகம் சுழித்த காட்சிகள் தான் இவை..!
நடிகையும் , ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா, தேர்தல் தோல்விக்கு பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். கணவர் ஆர்.கே செல்வமணியுடன் சேர்ந்து சுவாமி கும்பிட்டு விட்டு திரும்பிய ரோஜாவுடன் செல்பி எடுக்க ரசிகர்கள் போட்டிப்போட்டனர்.
கோபப்படாமல் அனைவருடனும் சிரித்த முகத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
கோயில் குருக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ரோஜாவின் அருகில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இதனை பார்த்த கோவிலின் தூய்மைப்பணியாளர்களான இரு பெண்கள், அவரது அருகில் நின்று புகைப்படம் எடுக்க சென்றனர். அவர்களை கண்டதும் முகம் சுழித்தவாறு ரோஜா, கையால் சைகை காண்பித்து தள்ளி நிற்க சொன்னார்.
அந்த இரு தூய்மைப்பணியாளர்களும் கோபித்துக் கொள்ளாமல், ரோஜா சொன்னபடி தள்ளி நின்றே புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இது குறித்து அவருடன் வந்தவர்கள் கூறுகையில் அந்த இரு பெண்களும் அழுக்காக இருந்ததாகவும், அதனால் தான் மேடம், ஒட்டாமல் நிற்க சொன்னதாகவும் விளக்கம் என்ற பெயரில் சமாளித்து சென்றனர்.
கோவிலுக்குள்ளும், கோவிலுக்கு வெளியேயும் நாம் சுகாதாரமாக சாமி கும்பிடுவதற்காக , தூய்மைப்பணியில் ஈடுபடும் அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தானே ? அவர்களை வெறுத்து ஒதுக்கியது ஏன் ? என்று கேள்வி எழுப்பி உள்ளனர் நெட்டிசன்கள்