கடலூரில் மனைவியை பிரிந்த ஐ.டி.ஊழியரையும், அவரது தாய் மற்றும் மகனையும் மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தீவைத்து எரித்த கொடூரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிகுப்பத்தை சேர்ந்தவர் சுகந்த் என்கிற சுதன்குமார். ஐ.டி.ஊழியரான இவர் மாதத்தில் 15 நாட்கள் ஐதராபாத்தில் தங்கி இருந்தும், மீதி நாட்கள் வீட்டில் இருந்தும் பணிபுரிந்து வந்தார். 6 மாதங்களுக்கு முன்பு இவரது தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், இங்குள்ள வீட்டில் சுகந்த், தனது 60 வயதான தாய் கமலேஸ்வரி, 10 வயது மகன் நிஷாந்த் ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து பிணம் எரியும் துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே பார்த்த போது வீட்டின் வரவேற்பறையில் அவரது தாய் கமலேஸ்வரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் எரிந்து கொண்டிருந்தது. உள்ளே மற்றொரு அறையில் சுகந்தும், படுக்கை அறையில் அவரது மகன் நிசாந்தும் வெட்டிக் கொல்லப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தனர்.
வீட்டில் நகை பணம் ஏதும் கொள்ளையடிக்கப்படவில்லை, சடலத்தில் கூட தங்க நகைகள் அப்படியே கிடந்தன. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வீடு முழுவதும் ரத்த சகதியாக காணப்பட்டது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு 3 பேரையும் வீடு புகுந்து வெட்டிக்கொன்ற மர்மக்கும்பல், போலீசுக்கு கொலை குறித்த தகவல் கிடைக்காததால் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் வந்து அவர்களின் உடல் மீது துணிகளை போட்டு தீவைத்துச் சென்றிருக்கலாம் என்ரு தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
அந்த வீட்டில் இருந்த 3 செல்போன்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதனை அந்த மர்ம ஆசாமிகள் பார்மெட் செய்து சென்றிருப்பது தெரியவந்தது. அதாவது அனைத்து தகவல்களையும் முழுமையாக அழித்துள்ளனர். சுகந்த் கடைசியாக யாரிடம் பேசினார் ? என்ன பேசினார் ? எவ்வளவு நேரம் பேசி உள்ளார்? போன்ற விவரங்கள் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இப்படி செய்திருக்கலாம் போலீசார் சந்தேக்கிக்கின்றனர்.
இதையடுத்து அந்த செல்போனில் பயன்படுத்திய சிம்கார்டு எண்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களை தொடர்பு கொண்டு அழைப்பு விவரங்களை கேட்டுப்பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர். சுகந்த்தின் முதல் மனைவி டில்லி. இவர் திருமணமான 6 மாதங்களில் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், அஞ்சும் சுல்தான் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாகவும் அவர்களுக்கு பிறந்த மகன் தான் நிஷாந்த் என்றும் கூறப்படுகின்றது.
காதல் மனைவியும் சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று சென்று விட்டதால், அவர் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு மர்ம கார் ஒன்று அந்தப்பகுதிக்கு வந்து சென்றது அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி ஒன்றில் பதிவாகி உள்ளது. அதனை வைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். அதே நேரத்தில் கொலையாளிகள் முதலில் கொலை செய்து விட்டு மீண்டும் 2 நாட்கள் கழித்து வந்து சடலத்தை எரித்து வீட்டை பூட்டிச்செல்லும் அளவுக்கு போலீசாரின் ரோந்து பணி மந்தமாக இருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.