விசிக பெண் கவுன்சிலரின் வீட்டில் கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்த 4 ரவுடிகளை அதிரடியாக தட்டித்தூக்கிய போலீசார் 22 கூர்மையான ஆயுதங்களை கைப்பற்றியதோடு, ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கவுன்சிலரின் கணவரையும் கைது செய்தனர்...
கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே பாத்திமா புரத்தை சேந்தவர் விசிக பிரமுகரான அலெக்ஸ் . இவரது மனைவி ரூபின்சா கும்பகோணம் மாமன்ற கவுன்சிலராக உள்ளார். இவர்களது வீட்டில் சந்தேகத்துக்கு இடமான வகையில் மர்ம நபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விசிக கவுன்சிலரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். போலீசாரின் சோதனைக்கு கவுன்சிலரின் கணவர் அலெக்ஸ் மற்றும் வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போலீசார் தாங்கள் நீதிமன்ற அனுமதி பெற்று வந்திருப்பதாக கூறி வீட்டுக்குள் ஒவ்வொரு அறையாக சல்லடை போட்டு தேடினர். அப்போது படுக்கை அறையில் கட்டிலுக்கு அடியே சிலர் பதுங்கி இருப்பதை கண்டு பிடித்தனர்
கட்டிலுக்கு அடியில் இருந்த கிங் ஆண்டனி ,அர்னால்டு ஆண்டனி, பாலுசாமி,அருண்குமார் என்கிற அஜய் ஆகிய நால்வரையும் வெளியே வரச்செய்தனர்.
விசாரணையில் அந்த 4 பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட 22 கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கவுன்சிலரின் கணவர் அலெக்சையும் போலீசார் கைது செய்தனர். அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து அவரது வழக்கறிஞர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். போலீசார் அவர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர்
இது தொடர்பாக , அலெக்ஸின் வழக்கறிஞர்கள் கூறும் போது, பாத்திமா புரத்தில் அலெக்ஸ் வீட்டின் எதிரே உள்ள நபர் இரு சக்கர வாகனத்தில் வேகமாக தெருவில் வந்துள்ளார். அப்போது ஏன் இவ்வாறு வேகமாக வருகிறீர்கள் ?என அலெக்ஸ் தரப்பினர் கேட்டதற்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதன் அடிப்படையிலேயே அந்த நபர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் காவல்துறையினர் அலெக்ஸ் வீட்டில் சோதனை செய்துள்ளனர் என்றும் அலெக்ஸ் வீட்டில் இருந்த ஆயுதங்கள் மாடுகளை வெட்டி மாட்டுக்கறி விற்பதற்காக வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர்.