மதுரையில் 2 கோடி ரூபாய் கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட போலீஸ் காரரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மிரட்டல் விடுத்த ரவுடியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
மதுரை எஸ்.எஸ். காலனியை சேர்ந்த ராஜலெட்சுமி என்பவரது 14 வயது மகன் ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற போது ஆம்னி காரில் வந்த மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் மிரட்டி மாணவனையும், ஆட்டோ ஓட்டுனரையும் கடத்திச்சென்றது. ஆட்டோ ஓட்டுனரின் செல்போனில் இருந்து மாணவனின் தாய் ராஜலெட்சுமியை தொடர்பு கொண்ட கடத்தல் காரன் 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தான்
ராஜலெட்சுமியின் புகாரின் பேரில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த கடத்தல் கும்பல் மாணவனையும், ஆட்டோ ஓட்டுனரையும் செக்கானூரணி அருகே கின்னிமங்கலம் காட்டுப்பகுதிக்குள் இறக்கி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகின்றது. பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட ஆம்னி கார் சென்ற ரூட்டை பிடித்தனர். தேனி மாவட்டம் , போடி பகுதியில் வைத்து செந்தில் குமார் என்பவரை கைது செய்தனர். தமிழ் நாடு காவல்துறையில் காவலராக பணியில் இருந்த செந்தில்குமார் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
அவர் தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி ஒருவனுடன் சேர்ந்து தனக்கு தெரிந்த பெண்மணி ஒருவருக்காக இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. எஸ்.எஸ். காலணியை சேர்ந்த பெண்மணி ஒருவரிடம் இருந்து , ராஜலெட்சுமியின் கணவர் ராஜ்குமார் வணிகவளாகம் ஒன்றை விலைக்கு வாங்கிய வகையில் ஒன்றரை கோடி ரூபாய் வரை பணம் கொடுக்க வேண்டி இருந்ததாக கூறப்படுகின்றது.
இதற்காக கடன் மேல் கடன் வாங்கி கடன் தொல்லையால் மன உளைச்சல் அடைந்த ராஜ்குமார் 6 மாதத்திற்கு முன்பாக உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் அந்த பணத்தை கொடுக்க இயலாததால் ராஜலட்சுமி இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகின்றது. அந்த 1 1/2 கோடி ரூபாய் பணத்துடன் கடத்தல் கும்பலுக்கும் கூலியாக பணம் கொடுக்க வேண்டும் என்பதால் அந்த பெண்மணி, ரவுடியை ஏவி மாணவனை கடத்தி , 2 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட பெண்மணியை மடக்கிய போலீசார், கடத்தல் கும்பலை சேர்ந்த நெல்லை ரஹ்மான்பேட்டையை சேர்ந்த அப்துல்காதர், தென்காசி சிவகிரி பகுதியில் உள்ள வீரமணி, காளிராஜ் ஆகிய மூவரை கைது செய்தனர். ஆடியோவை வைத்து ரவுடியை அடையாளம் கண்ட நெல்லை, தென்காசியை சேர்ந்த தனிப்படை காவல்துறையினர் 3 பேரையும் பிடித்து SSகாலனி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.