கொடைக்கானலில் போதையில் வாகனம் ஓட்டியதாக புதுச்சேரியை சேர்ந்த 3 ஆசாமிகளை போக்குவரத்து காவலர்கள் தடுத்து நிறுத்திய நிலையில் , தங்களுக்கு உள்த்துறை அமைச்சர் உறவினர் என்றும் ஐஜியை தெரியும் என்றும் மிரட்டினர். நீண்ட நேரமாகியும் போலீசார் விடாததால், காரை அப்படியே நிறுத்தி விட்டு நடந்து சென்றனர்.
புதுச்சேரியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இடத்தில் போதையில் கார் ஓட்டி வந்ததாக போக்குவரத்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட அலம்பல் பாய்ஸ் இவர்கள் தான்..!
போக்குவரத்து போலீசார் நடத்திய சோதனையில் காரை ஓட்டிவந்தவரும் காரில் இருந்து மேலும் இருவரும் மது அருந்தி இருப்பது உறுதியானது. ஓட்டுனருக்கு அபராதம் விதித்த போலீசார் செல்லானில் கையெழுத்து போட சொல்ல அதற்கு மறுத்து அடம்பிடித்த ஓட்டுனர் தனக்கு புதுவை உள்த்துறை அமைச்சரின் உறவினர் என்றதோடு, போலீசாரை ரவுடிகள் என்று சொன்னார்
கையெழுத்துபோடச்சொன்ன உடனே போடனுமா என் செல்வாக்க காட்டுகிறேன் பாரு , என்று சிலருக்கு போன் செய்தனர்.
இதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த செய்தியாளரிடம், நாங்களும் புதுச்சேரியில் மீடியா தான் என்றார்
உடன் வந்த இருவர் போலீசாரிடம் கெஞ்சியபடி நிற்க, போதையில் காரை ஓட்டிவந்ததாக போலீசாரால் குற்றஞ்சாட்டப்பட்டவரோ, தனது செல்வாக்கை காட்டுவதாக போலீசாரை தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருந்தார்.
நீணட நேரமாக அலம்பல் செய்த ஓட்டுனர் ஒரு கட்டத்தில், “தான் மதியம் அருந்திய மதுவுக்காக இரவில் எப்படி அபராதம் போடுவீங்க.. ? கையெழுத்தும் போட மாட்டேன்... எனக்கு காரும் வேண்டாம்... இன்னும் 2 நாள் இங்கு தான் இருப்பேன் , காவல் நிலையம் வந்து பார்த்துக் கொள்கிறேன்” என்று காரை எடுக்காமல் நடந்தே சென்றார்.