ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், அவரது அறிவிப்பு நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்பு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஓசூர் விமான நிலையம் குறித்து, கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி, திமுக எம்.பி வில்சன்எழுப்பிய கேள்விக்கு, அன்றைய விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், மத்திய அரசு மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கிடையேயான ஒப்பந்தத்தின்படி, பெங்களூரு சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு அதாவது 2033 ஆம் ஆண்டு வரை 150 கி.மீ. சுற்றளவில், புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்று பதில் அளித்தாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், ஓசூரில் அமைந்துள்ள விமான நிலையம், TAAL என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நிலையம் என்பதால், மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடியாது என்றும், அவ்விமான நிலையத்தை பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்த 30 கோடி ரூபாய் செலவாகுமெனவும் வி.கே.சிங் கூறியதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
ஓசூர் விமான நிலையத்தைப் பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்த ஆகும் செலவு 30 கோடி ரூபாய் என்றும் விளக்கமாகக் கூறியதோடு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் ஆய்வு முடிவுகளையும் எடுத்துக் கூறியிருந்தார்.
அத்துடன், தமிழக அரசு TAAL நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்திப் பயன்படுத்தலாம் என்றும் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.
இவ்விளக்கம் அளிக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்து விட்டபோதும், TAAL நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்யாமல், வெறும் விளம்பரத்துக்காக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது யாரை ஏமாற்றுவதற்காக என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.