சுதந்திர தினவிழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம், சிறந்த சேவைக்கான விருது பெற்ற வன அதிகாரி ஒருவர் அரசு வாகனத்தில் சென்று ஊர் ஊராக மாமூல் கேட்டு வாங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேலூர் மண்டல வன பாதுகாப்பு படை அலுவலராக பணியாற்றி வந்த மூர்த்தி தனது படை பரிவாரங்களுடன் அரசு வாகனத்தில் ஊர் ஊராக சென்று மரம் வெட்டுபவர்களிடம் பகிரங்கமாக லஞ்சம் கேட்கும் காட்சிகள் தான் இவை..!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நிம்மியம்பட்டு, ஆலங்காயம், ஏலகிரி, புதூர்நாடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சமூக விரோதிகள் மரங்களை வெட்டி செல்கின்றனர். இதனை தடுக்கும் அதிகாரியான இவர்கள் “என்னப்பா வைரம் போல மரமா இருக்கு இதுக்கு 100 ரூபாய் கொடுத்தா எப்படி ” ? என்று வனவர் ஜோதி மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோருடன் சென்று தீவிர வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகின்றது.
ரேஞ்சருக்கு மட்டுமில்ல எங்களுக்கும் கொடுக்கணும், அதிகமில்லை மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்பதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. வீட்டுத்தேவைக்கு விறகுக்காக மரத்தை வெட்டிச்செல்வதாக கூறியவரின் வாகனத்தை பறிமுதல் செய்வதாக மூர்த்தி மிரட்ட, அந்த நபர் இறுதியாக தனது கையில் 100 ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறி கெஞ்சி உள்ளார்
அப்போது நான் மட்டும்தான் பேசணுமா ஜோதி வாயில் என்ன கொழுக்கட்டை வச்சிருக்கியா, வேணாம்னா விட்டுட்டு போயிடலாம் என்ற மூர்த்தி அவன் 500 கொடுத்தாலும் வாங்கிரு என்று கூறுவது வசூல் வேட்டையின் உச்சகட்டம் என்கின்றனர் வீடியோவை பார்த்தவர்கள்.
வேலூர் மண்டல பாரஸ்ட் ஸ்குவாட் ஆக பணியாற்றி வரும் மூர்த்தி மற்றும் பாலசுப்பிரமணியம், ஜோதி ஆகியோர் லஞ்சம் பெறும் வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்து மூர்த்தியிடம் விளக்கம் கேட்டபோது அவர் அந்த வீடியோ பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் யாரிடமும் லஞ்சம் பெற்றதில்லை என்றும் தனக்கு வேண்டாதவர்கள் வீடியோ வெளியிட்டிருப்பார்கள் என்றும் மறுப்பு தெரிவித்தார்