4 நாட்களுக்கு முன்பு வாங்கி வைத்த பாக்கெட் சாராயத்தை குடித்தவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தனது மகனின் எதிர்காலத்தை பற்றிய அக்கறை இல்லாமல் குடித்து விட்டு போதை மயக்கத்தில் கிடந்தவர் மீட்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
4 நாளைக்கு முன்பு கண்ணுகுட்டி கடையில பாக்கெட் சாராயம் வாங்கி வைத்து விட்டு , வெளியூருக்கு வேலைக்கு போயி திரும்பி வந்ததும் அதனை குடித்து விட்டு கண் விழிபிதுங்க அமர்ந்திருக்கும் சின்னமணி இவர் தான் ..!
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் , அதே ஊரை சேர்ந்த சின்னமணி என்பவர் 4 நாட்களுக்கு முன்பாக கண்ணுகுட்டி என்கிற கோவிந்தராஜிடம் 5 பாக்கெட் சாராயத்தை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாகவும், அதில் ஒரு பாக்கெட் சாராயத்தை காலையில் மாமியாருக்கு கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது. அதை சாப்பிட்டதும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மாமியாரை சிகிச்சைக்காக சின்னமணியின் மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.
இந்த நிலையில் தனது சின்னஞ் சிறு மகனின் எதிர்காலம் குறித்த எந்த ஒரு அக்கறையும் இல்லாமல், அவனுக்கு சில தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து விட்டு, மாலை வேளையில் 2 பாக்கெட் சாராயத்தை குடித்துவிட்டு தனக்கு வயிறு எரிவதாக பதறிக் கொண்டிருந்த சின்னமணியை, தண்ணீர் தெளித்து எழுப்பி 108 ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சின்னமணி ஏற்கனவே விஷசாராயம் குடித்ததாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் என்றும் நலமடைந்து வீடு திரும்பிய அவர் மீண்டும் சாராயம் குடித்து விட்டு 2-வது முறையாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்