தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சாலையில் தவறாக சரக்கு ஆட்டோ ஓட்டிச்சென்ற பொறுப்பற்ற ஓட்டுனரால் சாலையில் ஒழுங்காக பைக் ஓட்டி வந்த இளைஞர் விபத்தில் சிக்கிய நிலையில் தரமான ஹெல்மெட் அணிந்ததால் உயிர் தப்பினார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ராமர் கோவில் ஆர்ச் எதிரே நெல்லை - தென்காசி சாலையில் தவறான ரூட்டில் சென்ற சரக்கு ஆட்டோ ஒன்று பைக் மீது மோதிய காட்சிகள் தான் இவை..!
சம்பவத்தன்று மதியம் 12 மணியளவில், அங்குள்ள உணவகம் முன்பு லோடு ஆட்டோவில் விதியை மீறி நீளமான கம்பி ஒன்றை ஏற்றிக் கொண்டு ஓட்டுனர் எதிர்திசையில் தவறாக ஆட்டோவை ஓட்டிச்சென்றார். புறப்பட்ட சில வினாடிகளில் சரியான திசையில் வந்த பைக் மீது அந்த சரக்கு ஆட்டோ நேருக்கு நேராக மோதியது.
இதில் பைக்கில் வந்த வாலிபர் சிறிது காயத்துடன் உயிர் தப்பினார். ஆட்டோவும் சேதம் அடைந்தது. அதிர்ஷடவசமாக ஆட்டோவின் மேல் கட்டப்பட்டு நீண்டிக் கொண்டிருந்த கம்பி எந்த ஒரு வாகனத்தின் மீதும் இடிக்காததால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
பைக்கில் வந்த இளைஞர் பீர்முகமது நல்ல தரமான தலைக்கவசம் அணிந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனர் இழப்பீடாக, பீர் முகமதுவுக்கு 8 ஆயிரம் ரூபாய் தருவதாக சம்மதம் தெரிவித்ததால் இந்த விபத்து தொடர்பாக பாதிப்புக்குள்ளானவர் புகார் ஏதும் அளிக்கவில்லை என்று தெரிவித்தார் காவல் ஆய்வாளர் மாதவன். அதே நேரத்தில் சாலைவிதியை மீறி பிற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இரும்பு கம்பியை ஆட்டோ மீது ஏற்றிச்சென்றது, தவறான திசையில் ஆட்டோவை ஓட்டிச்சென்றதற்கும் போலீசார் ஆட்டோ ஓட்டுனர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.